newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Tuesday 21 October 2014

‘கத்தி’ பட விவகாரம்: சென்னை சினிமா தியேட்டரில் தாக்குதல்


சென்னை:22.10.2104



நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ படவிவகாரம் தொடர்பாக சென்னையில் திரைஅரங்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல் குண்டுகள் வீச்சு

நடிகர் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ திரைப்படம் இன்று (புதன்கிழமை) தீபாவளி தினத்தையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

கத்தி படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேயின் பினாமி நிறுவனம் என்றும், லைகா நிறுவனம் தயாரித்துள்ள கத்தி படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிழ் அமைப்புகள் ஏற்கனவே அறிவித்து இருந்தன.

இந்த நிலையில் கத்தி படம் திரையிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த சென்னை சத்யம் மற்றும் உட்லண்ட்ஸ் திரை அரங்குகள் மீது, நேற்று முன்தினம் நள்ளிரவு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. சத்யம் திரை அரங்கில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. உருட்டு கட்டையாலும், திரை அரங்கின் அலங்கார கண்ணாடிகளை உடைத்தார்கள். உட்லண்ட்ஸ் திரை அரங்கு மீது கல்வீசி தாக்குதல் நடந்தது.

5 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக சத்யம் திரை அங்கின் துணை மேலாளர் நிர்மல் குமார், அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அண்ணாசாலை போலீசார் இந்த புகார் அடிப்படையில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வெடிபொருட்கள் தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவைச் சேர்ந்த அப்பு (வயது 32), ஜெயக்குமார் (25), கிருஷ்ணன் (20), வாசுதேவன் (28), ஜெயப்பிரகாஷ் (27) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நீதிமன்ற காவலில் இவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தனி வழக்கு

உட்லண்டஸ் திரை அரங்கு மீது தாக்குதல் நடத்திய வழக்கில், அந்த தியேட்டரின் மேலாளர் வெங்கடேசன் கொடுத்த புகார் அடிப்படையில், ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, அப்பு என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும், கத்தி படம் திரையிடப்பட்டுள்ள திரை அரங்குகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீபாவளி பாதுகாப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று இரவில் இருந்து தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். சென்னையிலும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், விபத்தில்லாத, மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாட, பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment