newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Thursday 27 November 2014

வாழ்வியல் திறன் பயிற்சி - ராயம்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி

அரியலூர்: 26.11.2014

அரியலூர் மாவட்டம், ராயம்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. வாழ்வியல் திறன் பயிற்சியில் WHO கூறிய 10 அடிப்படைத் திறன்களும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வும் பற்றி  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

பயிற்சியின் பொது மாணவர்கள்,










24.11.2014 - 25.11.2014 வரை இரண்டு நாள் பயிற்சி இனிதே நிறைவுற்றது.

Monday 10 November 2014

இலங்கை சிறையில் உள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்கள் இந்திய சிறைக்கு மாற்ற ஒப்புதல்.



மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளார்.



இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நடத்திய  பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான துரித நடவடிக்கையில் ஆறுமுக தொண்டைமான் ஈடுபட்டுள்ளார். இன்னும் பத்து நாட்களுக்குள் தமிழகத்தின் தஞ்சை மாவட்ட  சிறைக்கு மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Sunday 9 November 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்., தலைவன் அபுபக்கர் ஒழிந்தான்.....?

பாக்தாத்: ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் வீழ்ந்த மாகாணங்களுக்கு, அவர்களாக நியமித்த கவர்னர்கள் மற்றும் அந்த கொடூர பயங்கரவாதிகளின் முக்கிய தலைவர்களின் ரகசிய கூட்டம் நடைபெற்ற கட்டடம் மீது, அமெரிக்க விமானங்கள் நேற்று நடத்திய குண்டுவீச்சில், அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் - பாக்தாதி உட்பட பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேற்காசிய நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவில், பல பகுதிகளை கைப்பற்றி, எதிர்த்த ஏராளமானோரையும், சிறுபான்மை யின மக்களையும் கொன்று குவித்து வரும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம், அந்த இரு நாடுகளின் பல மாகாணங்கள் வீழ்ந்துள்ளன.

அங்கு, முறையான ஆட்சியிலிருந்த கவர்னர் கள் மற்றும் முதல்வர்களை கொன்று விட்டு அந்த பொறுப்பில், பயங்கரவாதி கள் தலைவன், அபுபக்கர் அல் - பாக்தாதி நியமித்த பயங்கரவாதிகள் பதவி வகித்து வருகின்றனர்.

இவர்களில் பலர், ஈராக்கின் வடமேற்கு பகுதியில் உள்ள அன்பார் மாகாணத்தில், ரகசிய இடம் ஒன்றில் நேற்று கூடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கட்டடம் மீது அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசி, அந்த கட்டடத்தையே தகர்த்தது. இதில், பல மாகாணங்களின் கவர்னர்கள், பயங்கரவாதிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த கூட்டத்தில், அபுபக்கர் அல் - பாக்தாதி பங்கேற்றிருந்தால், அவன் படுகாயம் அடைந்திருக்க வேண்டும் அல்லது கொல்லப்பட்டிருக்க வேண்டும் என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், அந்த கூட்டத்தில், அபுபக்கர் அல் - பாக்தாதி பங்கேற்றானா என்பது குறித்து, பயங்கரவாதிகள் தரப்பிலிருந்து தெளிவான தகவல் இல்லை. இந்த தாக்குதலில் அவன் இறந்திருந்தால், அது, அந்த பயங்கரவாதிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு: 21 பேர் புதிதாக சேர்ப்பு


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் 4 கேபினட் அமைச்சர்கள் உட்பட 21 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். சிவசேனாவைச் சேர்ந்த அனில் தேசாய் அமைச்சராவார் என கூறப்பட்ட நிலையில், அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு கடந்த மே மாதம் பொறுப்பேற்றபின், இன்று முதன்முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கேபினட் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். சிவசேனா கட்சியின் சுரேஷ் பிரபு, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜே.பி.நட்டா, ஹரியானாவைச் சேர்ந்த பிரேந்தர் சிங் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார். தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக தெலங்கானாவைச் சேர்ந்த பண்டாரு தாத்தாரேயா, பாரதிய ஜனதா மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மகேஷ் ஷர்மா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி, ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் பதக்கம் வென்ற ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பீகாரைச் சேர்ந்த ராம் கிரிபால் யாதவ், யஷ்வந்த் சின்காவின் மகன் ஜெயந்த் சின்கா ஆகியோர் இணையமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டுள்ளனர். இதேபோன்று தெலுங்குதேசம் கட்சி மாநிலங்களவை எம்.பி.யும் தொழிலதிபருமான ஒய்.எஸ்.சவுத்ரி, மேற்குவங்க பாடகர் பாபுல் சுப்ரியோ, பெண் துறவி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்டோரும் மத்திய இணையமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி உட்பட 45 பேர் இடம்பெற்ற நிலையில், தற்போது புதிதாக 21 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அமைச்சரவை பலம், 66-ஆக உயர்ந்துள்ளது. 


Saturday 8 November 2014

அரியலூர் மாவட்டத்தில் போலி மதுபானம் விற்ற 13 பேர் கைது


அரியலூர் மாவட்டத்தில் போலி மதுபானம் விற்ற மளிகை கடைக்காரர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.


ரகசிய தகவல்



அரியலூர் மாவட்டம்  மீன்சுருட்டி அருகே உள்ள மேலணிக்குழி கிராமத்தில் போலி மது பானம் விற்கப் படுவதாக கலெக்டர் சரவண வேல்ராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.


அதனை தொடர்ந்து கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவு படி பெரம்பலூர் மாவட்ட உதவி கலால் ஆணையர் சாரங்கபாணி, டாஸ்மாக்  மண்டல மேலாளர் சத்தியன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன், கோட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், கூடுதல் கலால் கண்காணிப்பாளர் செல்லதுரை மீன் சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார்  நேரில் வந்து  விசாரணை நடத்தினர்.   

மளிகைக்கடை



அப்போது அதே ஊரை சேர்ந்த  தவமணி (வயது 26), என்பவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்து தொழில் செய்து வருவதும், இவருடைய கடையில் போலி மதுபானம் தயார் செய்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.


பின்னர் கடை மற்றும் வீட்டை சோதனை செய்த போது தவமணியின் வீட்டின் பின்புறம் உள்ள குளியலறையில் போலி மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது



உடனடியாக அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து தவமணியையும் போலீசார் கைது செய்தனர்.


  அரசு மதுபான பாட்டிலில் சீல் பிரிக்காமல் போலி மதுபானம் தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 12 பேர் கைது



அரியலூர் மாவட்டத்தில் 16 போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில்  மது விலக்கு அமல்பிரிவு போலீசார்   நேற்று   ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது   கோவிந்தராஜ், சுப்பிரமணியன், மணிகண்டன், செல்லதுரை, குணசேகரன், ராஜேந்திரன், ரங்கராஜ், தருமராஜ், கார்த்திகேயன், கோவிந்தராஜ், சிவா, ராஜேந்திரன் ஆகிய 12 பேரை அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக  கைது செய்து அவர்களிடமிருந்து 56 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர் சிலை, ஸ்ரீபுரந்தான் கோவிலுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது

அரியலூர் அருகே ஸ்ரீபுரந்தான் கைலாசநாதர் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

நடராஜர் சிலை மீட்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள ஸ்ரீபுரந்தானில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 8 சாமி சிலைகள் மர்ம மனிதர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் நடராஜர் சிலையின் மதிப்பு மட்டும் ரூ.31 கோடியாகும்.

இந்த நடராஜர் சிலையை ஒரு கும்பல் கடத்தி ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் விற்றது தெரியவந்தது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் நடராஜர் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் நடராஜர் சிலை ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு கும்பகோணம் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

ஸ்ரீபுரந்தான் கொண்டு வரப்பட்டது

இந்த நிலையில் ஸ்ரீபுரந்தான் கைலாசநாதர் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக நடராஜர் சிலையை கோவிலுக்கு கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து செயல் அலுவலர் மணி, தா.பழூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசுதா மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சிவசுப்பிர மணியன், ஊராட்சி தலைவர் கலாவதி சுப்பிரமணியன், வழக்கறிஞர் அசோகன், காளிமுத்து, சாந்தி பூசன், வீராசாமி, நாகமுத்து ஆகியோர் கோர்ட்டு அனுமதி பெற்று கும்பகோணம் சிலை பாதுகாப்பு அருங்காட்சியகத்திற்கு சென்று நடராஜர் சிலையை பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஸ்ரீபுரந்தானுக்கு நேற்று கொண்டு வந்தனர்.

நடராஜர் சிலையை கொண்டு வந்தபோது கிராம மக்கள் தெருக்களை சுத்தப்படுத்தி வீதிகளில் கோலம் போட்டு விளக்கேற்றி உணர்ச்சி பொங்க நடராஜரை வழிபட்டனர்.இதையடுத்து கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக நடராஜர் சிலை வைக்கப் பட்டுள்ளது. 6 ஆண்டுகளாக வெளிநாட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை

நடராஜர் சிலை கொண்டு வரப்பட்டுள்ளதையொட்டி பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த கோவிலில் போதிய பாதுகாப்பு இல்லாததால் மீண்டும் நடராஜர் சிலை கும்பகோணம் எடுத்து செல்லப்படும் என்று அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். காலம் காலமாக வழி பாடு நடத்தப்பட்டு வந்த நடராஜர் சிலை இங்கேயே இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும், மேலும் இக்கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ள மற்ற சிலைகளையும் நிரந்தரமாக ஸ்ரீபுரந்தான் கோவிலிலேயே வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.


Friday 7 November 2014

அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை திட்டங்களை கலெக்டர் ஆய்வு



அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங் களை கலெக்டர் சரவண வேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பயனாளிகளை நேரில் சந்தித்து கலெக்டர் சரவணவேல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதில் தேசிய தோட் டக்கலை இயக்க திட்டத்தின் மூலம் 2013–14ம் ஆண்டில் அரியலூர் வட்டாரத்தில் மேலக்கருப்பூர் கிராமத்தில் அய்யனார் வயலில் நடவு செய்யப்பட்ட எலுமிச்சை வயலை அவர் ஆய்வு செய்தார்.  மேலும் வாழை மரங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு திட்டத் தின் பயன்களை அதிக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கினார்.

பின்னர், மேலக்கருப்பூர் கிராமத்தில் செல்வம் என்ற விவசாயி மக்காச்சோளம் பயிரிட்டுள்ளதையும், பெரியநாகலூர் கிராமத்தில் விஸ்வநாதன் என்ற விவசாயி வயலில் துவரை பயிரிட்டுள்ளதையும், அஸ்தினாபுரம் கிராமத்தில் சுரேஷ் என்ற விவசாயி 1 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளதையும், கருணா மூர்த்தி என்பவர் அணுசரணை ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் நெல் உற்பத்தி செய்துள்ளதையும் கலெக்டர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

மிளகாய்வெங்காயம் சாகுபடி

மேலும், தேசிய நுன்னீர் பாசன திட்டத்தில் 2013–14ம் ஆண்டு அரியலூர் வட்டா ரத்தில் அருங்கால் கிராமத் தில், முருகேசன் என்ற விவசாயி வயலில் சொட்டு நீர்ப்பாசனத்தில் மிளகாய் மற்றும் வெங்காயம் சாகுபடி செய் யப்பட்டுள்ளதை  கலெக்டர் பார்வை யிட்ட போது 1 ஏக்கர் நிலத்தில் ரூ.30 ஆயிரம் லாபம் பெறுவதாக விவசாயி முருகேசன் தெரி வித்தார்.

மேலும், சொட்டுநீர் பாச னத்தில் நிரந்தர பயிரான மா பயிரிட்டு அதில் ஊடு பயிராக பருத்தி பயிர் செய்துள்ள சாமிநாதனின் விவசாய நிலத் தில் கலெக்டர் பார்வையிட்டபோது, தேசிய தோட்டக்கலை இயக்க திட் டத்தின் மூலம் மா பயிரிட 1 ஹெக்டேருக்கு ரூ.9,900 மானியம் வழங் கப்பட்ட தாகவும், சொட்டு நீர் பாசனம் அமைக்க 1 ஹெக்டே ருக்கு 75 சதவீதம் மானியமாக ரூ.73 ஆயிரத்து 816 வழங்கப் பட்டதாகவும் சாமிநாதன் தெரிவித்தார். பருத்தியில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பயிர் செய்வதால் 1 ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் லாபம் பெறுவதாகவும் தெரி வித்தார்.


இந்த ஆய்வின்போது வேளாண் இணை இயக்குனர் குணசேகரன், தோட்டக்கலை துணை இயக்குனர் சுப்பையா, உதவி இயக்குனர்கள் மோகன், சரண்யா மற்றும் வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tuesday 4 November 2014

அரியலூர் கலெக்டர் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

ஊழல்தடுப்பு உறுதிமொழி

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை யில் ஊழல் தடுப்பு விழிப்பு ணர்வு உறுதி மொழி எடுக்கப் பட்டது.

இந்நிகழ்ச்சியில்,இந்திய நாட்டின் பொதுப் பணியாளர் களாகிய நாம், நமது நடவடிக்கைகள் சார்ந்த எல்லா துறைகளிலும் நேர்மையும், ஒளிவுமறைவற்ற தன்மையும் இடம்பெறுவதற்கு, தொடர்ந்து அயராது பாடு படுவோம் என்று இதனால் உளமாற உறுதி கூறுவோம்”. “ஊழலை அறவே ஒழித்திட நம் வாழ்வில் இடையறாது முயல்வோம் எனவும் உறுதி கூறுவோம்”. என்ற உறுதி மொழியினை கலெக்டர் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர் களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்¢ ரவீந் திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முஸ்தபாகமால் பாட்ஷா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சடையப்ப விநாயக மூர்த்தி உள்பட வருவாய்த் துறை மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்களும் கலந்து கொண்டனர்.

Sunday 2 November 2014

கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளை திருமணம் செய்த தீவிரவாதிகள்...



நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளுக்கு, தீவிரவாதிகளுடன் திருமணம் நடக்கப்போகிறது என்று போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபோக் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கூட மாணவிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர். இதில் சிலர் தப்பி வந்த நிலையில் தற்போது 219 மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி உள்ளனர்.

இதற்கிடையே கடந்த மாதம் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தீவிரவாதிகள் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்து இருப்பதாக நைஜீரிய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தீவிரவாதிகள் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் தீவிரவாதிகளின் தலைவர் ஒருவர் தோன்றி, ‘நாங்கள் அரசுடன் உடன்பாடு மேற்கொள்ளவில்லை, போர் நிறுத்தம் செய்ததாக கூறுவதில் உண்மை இல்லை.

எங்களது தாக்குதல் தொடரும், கடத்தப்பட்ட மாணவிகளில் பெரும்பாலானவர்களை மதமாற்றம் செய்து விட்டோம். நாங்கள் அவர்களை திருமணம் செய்து கொண்டோம். அவர்கள் எங்கள் வீடுகளில் வசிக்கிறார்கள்என்று தெரிவித்து உள்ளார்.

தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள இந்த புதிய காணொளியால் நைஜீரியாவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 100 இலங்கை நாட்டினர் மீது ஹெராயின் கடத்தல் வழக்கு

சென்னை, அக். 31:



இலங்கையில் போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் தமிழ் நாட்டில் போதைப் பொருள் கடத்திய இலங்கையை சேர்ந்த 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஹெராயின்கடத்தியதாக தென் மண்டல போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. தற்போது இவர்கள் மீதான வழக்கு தமிழ்நாட்டில் பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெற்று வருகிறது.

இவர்கள் 250 கிராமுக்கு மேல் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்து 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

தொடர்ந்து போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இலங்கைவாசிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போதை பொருள் கடத்திய போது பிடிபட்டவர்கள். இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின் போது கிழக்கு கடற்கரை பகுதியில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து போதை பொருள் கடத்தும் தொழிலில் மந்தமான சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும், சென்னையில் பூமியில் புதைத்து மறைத்து வைத்திருந்த 15 கிலோ ஹெராயினை டெல்லி சிறப்பு போலீசார் தோண்டி எடுத்தனர். இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொதுவாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தான் போதை பொருள் கடத்தி வரப்படுகிறது. அது தமிழ்நாடு வழியாக ரெயில் அல்லது ரோடு மார்க்கமாக கொண்டு வரப்படுகிறது.
பின்னர் அவை சில ஏஜென்டுகள் மூலம் இலங்கைக்கு கடல் மூலமாகவும், மற்ற மேலை நாடுகளுக்கும் பலவித போக்குவரத்து மூலமாகவும் அனுப்பப்படுகிறது.



Saturday 1 November 2014

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியரிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி

சென்னை: 01.11.2014



பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் மடிக்கணினிகளை மலிவு விலைக்கு வாங்கித்தருவதாக கூறி ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கல்லூரி பேராசிரியர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 28). இவர், ஓரகடத்தில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன், பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தனது ஊருக்கு பஸ்சில் சென்றார்.

அப்போது கார்த்திகேயனுடன் வாலிபர் ஒருவர் அதே பஸ்சில் பயணம் செய்தார். அந்த வாலிபர், தான் அரசு மடிக்கணினிகளை ‘சர்வீஸ்’ செய்து வருவதாகவும், பல்லாவரத்தில் 30 மடிக்கணினிகளை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வாங்கித் தருவதாகவும் கார்த்திகேயனிடம் கூறினார்.

மலிவு விலைக்கு மடிக்கணினி

பின்னர் செல்போன் எண்ணை அவரிடம் கொடுத்து அதில் தொடர்பு கொள்ளும்படி கூறினார். மேலும் அந்த வாலிபர் அடிக்கடி கார்த்திகேயனிடம் பேசி ரூ.1 லட்சத்திற்கு மடிக்கணினிகளை மலிவு விலையில் பேசி முடித்து விட்டதாகவும், பணத்துடன் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தால் மடிக்கணினிகளை வாங்கித்தருவதாகவும் கூறினார்.

அதன்படி நேற்று முன்தினம் ரூ.1 லட்சம் பணத்துடன் நண்பர் சதீஷ் என்பவரை அழைத்துக்கொண்டு கார்த்திகேயன் காரில் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். சதீஷ் காரில் இருந்தார். கார்த்திகேயன் பணத்துடன் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்திற்குள் சென்றார்.

ரூ.1 லட்சத்துடன் தலைமறைவு

அங்கு மடிக்கணினிகள் தயாராக இருக்கிறது. பணம் கொடுங்கள் என வாங்கிய அந்த வாலிபர், பணம் நல்ல நோட்டா, கள்ள நோட்டா என பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு நகராட்சி அலுவலகத்தின் முதல் மாடிக்கு சென்றார்.

கார்த்திகேயன் பணத்தை கொடுத்து விட்டு படிக்கட்டு அருகில் காத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் பணம் வாங்கிய வாலிபர், முதல் மாடியில் இருந்து புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டிடம் வழியாக சென்று பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.

போலீசில் புகார்

நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் அந்த வாலிபரை தேடியபோது மடிக்கணினி வாங்கித்தருவதாக கூறி ரூ.1 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டு வாலிபர் தப்பி விட்டது தெரியவந்தது.

இது குறித்து குரோம்பேட்டை போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மர்ம வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள். பல்லாவரம் நகராட்சி அலுவலகத்துக்கு உள்ளேயே நடைபெற்ற இந்த நூதனமோசடி சம்பவம் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.