newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Saturday 8 November 2014

கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர் சிலை, ஸ்ரீபுரந்தான் கோவிலுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது

அரியலூர் அருகே ஸ்ரீபுரந்தான் கைலாசநாதர் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

நடராஜர் சிலை மீட்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள ஸ்ரீபுரந்தானில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 8 சாமி சிலைகள் மர்ம மனிதர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் நடராஜர் சிலையின் மதிப்பு மட்டும் ரூ.31 கோடியாகும்.

இந்த நடராஜர் சிலையை ஒரு கும்பல் கடத்தி ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் விற்றது தெரியவந்தது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் நடராஜர் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் நடராஜர் சிலை ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு கும்பகோணம் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

ஸ்ரீபுரந்தான் கொண்டு வரப்பட்டது

இந்த நிலையில் ஸ்ரீபுரந்தான் கைலாசநாதர் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக நடராஜர் சிலையை கோவிலுக்கு கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து செயல் அலுவலர் மணி, தா.பழூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசுதா மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சிவசுப்பிர மணியன், ஊராட்சி தலைவர் கலாவதி சுப்பிரமணியன், வழக்கறிஞர் அசோகன், காளிமுத்து, சாந்தி பூசன், வீராசாமி, நாகமுத்து ஆகியோர் கோர்ட்டு அனுமதி பெற்று கும்பகோணம் சிலை பாதுகாப்பு அருங்காட்சியகத்திற்கு சென்று நடராஜர் சிலையை பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஸ்ரீபுரந்தானுக்கு நேற்று கொண்டு வந்தனர்.

நடராஜர் சிலையை கொண்டு வந்தபோது கிராம மக்கள் தெருக்களை சுத்தப்படுத்தி வீதிகளில் கோலம் போட்டு விளக்கேற்றி உணர்ச்சி பொங்க நடராஜரை வழிபட்டனர்.இதையடுத்து கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக நடராஜர் சிலை வைக்கப் பட்டுள்ளது. 6 ஆண்டுகளாக வெளிநாட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை

நடராஜர் சிலை கொண்டு வரப்பட்டுள்ளதையொட்டி பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த கோவிலில் போதிய பாதுகாப்பு இல்லாததால் மீண்டும் நடராஜர் சிலை கும்பகோணம் எடுத்து செல்லப்படும் என்று அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். காலம் காலமாக வழி பாடு நடத்தப்பட்டு வந்த நடராஜர் சிலை இங்கேயே இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும், மேலும் இக்கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ள மற்ற சிலைகளையும் நிரந்தரமாக ஸ்ரீபுரந்தான் கோவிலிலேயே வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.


No comments:

Post a Comment