newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Saturday 1 November 2014

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியரிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி

சென்னை: 01.11.2014



பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் மடிக்கணினிகளை மலிவு விலைக்கு வாங்கித்தருவதாக கூறி ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கல்லூரி பேராசிரியர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 28). இவர், ஓரகடத்தில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன், பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தனது ஊருக்கு பஸ்சில் சென்றார்.

அப்போது கார்த்திகேயனுடன் வாலிபர் ஒருவர் அதே பஸ்சில் பயணம் செய்தார். அந்த வாலிபர், தான் அரசு மடிக்கணினிகளை ‘சர்வீஸ்’ செய்து வருவதாகவும், பல்லாவரத்தில் 30 மடிக்கணினிகளை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வாங்கித் தருவதாகவும் கார்த்திகேயனிடம் கூறினார்.

மலிவு விலைக்கு மடிக்கணினி

பின்னர் செல்போன் எண்ணை அவரிடம் கொடுத்து அதில் தொடர்பு கொள்ளும்படி கூறினார். மேலும் அந்த வாலிபர் அடிக்கடி கார்த்திகேயனிடம் பேசி ரூ.1 லட்சத்திற்கு மடிக்கணினிகளை மலிவு விலையில் பேசி முடித்து விட்டதாகவும், பணத்துடன் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தால் மடிக்கணினிகளை வாங்கித்தருவதாகவும் கூறினார்.

அதன்படி நேற்று முன்தினம் ரூ.1 லட்சம் பணத்துடன் நண்பர் சதீஷ் என்பவரை அழைத்துக்கொண்டு கார்த்திகேயன் காரில் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். சதீஷ் காரில் இருந்தார். கார்த்திகேயன் பணத்துடன் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்திற்குள் சென்றார்.

ரூ.1 லட்சத்துடன் தலைமறைவு

அங்கு மடிக்கணினிகள் தயாராக இருக்கிறது. பணம் கொடுங்கள் என வாங்கிய அந்த வாலிபர், பணம் நல்ல நோட்டா, கள்ள நோட்டா என பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு நகராட்சி அலுவலகத்தின் முதல் மாடிக்கு சென்றார்.

கார்த்திகேயன் பணத்தை கொடுத்து விட்டு படிக்கட்டு அருகில் காத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் பணம் வாங்கிய வாலிபர், முதல் மாடியில் இருந்து புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டிடம் வழியாக சென்று பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.

போலீசில் புகார்

நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் அந்த வாலிபரை தேடியபோது மடிக்கணினி வாங்கித்தருவதாக கூறி ரூ.1 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டு வாலிபர் தப்பி விட்டது தெரியவந்தது.

இது குறித்து குரோம்பேட்டை போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மர்ம வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள். பல்லாவரம் நகராட்சி அலுவலகத்துக்கு உள்ளேயே நடைபெற்ற இந்த நூதனமோசடி சம்பவம் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment